உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோம் – கமல்ஹாசன்

நடிகர் கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 6-ம் ஆண்டு தொடங்குகிறது. கட்சி ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில், தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு கமல் ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து செய்தி பதிவிட்டுள்ளார். கமல் தனது வாழ்த்து செய்தியில், “ஆரம்பித்த துடிப்புக் குறையாமல், ஐந்து ஆண்டுகளைக் கடந்திருக்கிறது #MakkalNeedhiMaiam . ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம்.
உள்ளத்தில் எரியும் அறத்தழல் ஒளி குன்றாமல் பார்த்துக்கொள்வோமாக. மநீம உறவுகள், நற்பணி இயக்க நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.” 2018 பிப்ரவரி 21இல் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை கமல் ஹாசன் தொடங்கினார். 2019 மக்களவை தேர்தலிலும், 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இக்கட்சி தனித்து களம் கண்டது.
2021இல் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் களம் கண்ட கமல் ஹாசன் பாஜக வேட்பாளர் வானாதி சீனிவாசனிடம் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். சமீப காலமாக திமுக, காங்கிரஸ் கட்சியினர் இடையே நட்பு பாராட்டி வரும் கமல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.