திறமையானவர்களை தமிழக மக்கள் அங்கீகரிப்பதில்லை.. ஆளுநர் தமிழிசை ஆதங்கம்
புதுச்சேரி துணை நிலை ஆளுநரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கோவை வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர் தமிழக மக்கள் திறமையானவர்களை அங்கீகரிப்பதில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலங்களுக்கு நியமிக்கப்படும் ஆளுநர்கள் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரால் பரிசீலனை செய்யப்பட்டு, அதன்பின் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழக மக்களால் எங்களை போன்றோரை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை. எனவே, மத்திய அரசு திறமையான நல்லவர்களை அடையாளம் காண்டு ஆளுநராக நியமித்து வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
மக்கள் எங்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருந்தால் எங்களை மத்திய மந்திரி ஆக்கியிருப்பார்கள். தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள் என்பதை சிந்தனை செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இடம் கேளுங்கள். நான் ஒரு ஆளுநர் என்பதால் இது தொடர்பாக கருத்து கூற முடியாது” என்று தெரிவித்தார்.