தேர்தலை உடன் நடத்தாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையும் ‘அவுட்’டாகும்! – கிரியெல்ல எச்சரிக்கை.
“நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்தால், அனைத்து அரச நிறுவனங்களும் அதற்கு ஒத்துழைப்பு வங்கவேண்டும். ஒத்துழைப்பு வழங்காவிட்டால் குறித்த அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முடியும். அத்துடன் தேர்தல் நடத்தாவிட்டால் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையையும் இழக்க நேரிடும்.”
இவ்வாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் நிதி அமைச்சு நிதி பணம் வழங்க முடியாது என்று கூறுகின்றது. அதேவேளை அச்சக பிரதானி தேர்தலுக்கான ஆவணங்களை அச்சிட முடியாது என்று கூறுகின்றார்.
இத்தகைய நிலையில் காலை வாரி விடாமல் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ள வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இடம்பெற்று கட்டுப்பணமும் செலவிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிட அரச ஊழியர்கள் தங்கள் பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.
அந்தநிலையிலேயே இன்று தேர்தல் நம்பிக்கையற்றதாகக் காணப்படுகின்றது. இதனால் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. சர்வதேச ரீதியிலும் பெரும் பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும்.
ஐ,சீ.சீ.பி,ஆர். சட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தவில்லை என்றால் எங்களுக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை இல்லாமல் போகின்றது. இப்போது ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகள் எம்மிடமிருந்து விலகிச் செல்ல முற்படுவதைக் காண முடிகின்றது. இவ்வாறான நிலையில் அரசு என்ன செய்கின்றது என்று கேட்கின்றேன்” – என்றார்.