ஓலா, உபேர், ரேபிடோ பைக் டாக்சிகளுக்குத் தடை.. அதிரடி உத்தரவிட்ட அரசு!

பொதுவாக வாடகை வண்டி என்றால் ஆட்டோ அல்லது கார்களை தான் குறித்து வந்தது. தனியாக செல்லும் நபர் அவ்வளவு வாடகை கொடுத்து தனி ஒருவருக்காக காரை அழைக்க வேண்டுமா என்று யோசிக்கத் தொடங்கியபோது தான் பைக் டாக்சி கலாச்சாரம் உருவானது. சந்து பொந்துகளில் கூட புகுந்து சீக்கிரம் போக வேண்டிய இடத்தை நேரத்திற்குள் அடைந்துவிடலாம் என்ற ஐடியா ஒர்க் அவுட் ஆனது.

ஆனால் இதில் உள்ள வண்டிகள் வாடகைக்கு விடப்படும் வண்டிகள் பட்டியலில் சேர்வதில்லை. சொந்த வாகனமாக இருப்பதால் வாடகைக்கு ஓடும் மற்ற வாகனங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் இந்த வாகனங்களுக்கு பொருந்துவதில்லை. இதனால் குற்றங்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. சொந்த இருசக்கர வாகனத்தில் வாடகை அடிப்படையில் பயணிகளை ஏற்றிச் செல்வது மோட்டார் வாகனச் சட்டம், 1988-ஐ மீறுவதாகக் கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 2022 இல், கர்நாடக அரசு Rapido, Uber மற்றும் Ola வழங்கும் ஆட்டோ சேவைகள் சட்டவிரோதமானது என்று கூறியது. மேலும் இந்த மாத தொடக்கத்தில் ரைடு பூலிங் போன்றவற்றிற்கு போக்குவரத்து அல்லாத வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு மகாராஷ்டிரா அரசாங்கம் தடை விதித்தது.

இதனையடுத்து டெல்லி அரசும் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. விதியை மீறினால் முதல்முறை ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் மற்றும் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அரசு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதே போல சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், ஓட்டுநர்களும் மூன்று மாதங்களுக்கு தங்கள் ஓட்டுநர் உரிமத்தை இழக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.

ஏற்கனவே வாடகை கால் டாக்சி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வேலையில் இருந்து நிறுத்தி வரும் நிலையில் பைக் டாக்சி மீதான தடை மேலும் பலரது வேலை இழப்பிற்கு காரணம் ஆகலாம் என்ற பயமும் எழுந்துள்ளது. ஆனால் சமூகத்தில் அதிகரித்து வரும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.