ஒழுங்கின்மையின் உச்சம்.. டெல்லி வரவே பிடிக்கவில்லை.. நாராயண மூர்த்தி பரபரப்பு கருத்து
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முன்னோடியுமாக திகழ்பவர் நாராயண மூர்த்தி. டாப் ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தி, தற்போது நிறுவன நிர்வாக பணிகளில் இருந்து விலகி கல்வித்துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், டெல்லி அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பு நிறுவன விழா டெல்லியில் நடைபெற்றது. இதில், நாராண மூர்த்தி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அதில், டெல்லி நகர் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் தனது உரையில் கூறியதாவது, “நான் டெல்லிக்கு வருவதையே அசவுகரியமாக கருதுகிறேன். ஒழுங்கினம் மோசமாக உள்ள நகரங்களில் ஒன்றாக டெல்லி உள்ளது. ஒரு உதாரணம் தருகிறேன். நேற்று நான் விமான நிலையத்தில் இருந்து வந்து கொண்டிருந்த போது கவனித்தேன்.
சிவப்பு சிக்னலில் பல கார்களும், பைக்குகளும் சிக்னல் விதிமுறைகளை மீறி பயணிக்கின்றன. ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் கூட காத்திருக்க நம்மால் முடியாதா என்ன. இது போன்ற சிறிய சிறய விஷயங்களில் கூட கவனித்து நாம் நமது குழந்தைகளை பயிற்றுவிக்க வேண்டும். அது தான் அவர்களை சரியான பாதையில் வழிநடத்தும். இந்தியர்கள் நினைப்பது போல நல்ல மனிதனாக நான் நடக்க விரும்பவில்லை.
இந்தியாவில் பிறர் திருடும் போது அதை பார்த்து சிரித்து கொண்டே அமைதியாக இருந்தால் உன்னை நல்லவன் என்பார்கள். ஆனால், நான் அப்படி அல்ல. தவறு என்றால் எழுந்து நின்று மரியாதையான முறையில் தவறை சுட்டுகாட்டுவேன். நமது தனிப்பட்ட சொத்துக்களை பராமரிப்பதை போலவே பொது சொத்துக்களையும் பராமரிக்க சொல்லித் தர வேண்டும்.இந்த கொள்கையை நாம் பின்பற்றாமல் போனதே பொது நிர்வாகத்தில் சீர் கேடு நிலவுவதற்கு காரணமாகிவிட்டது” என்றார்.