3 மாதங்களுக்குள் மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு?

பால் பொருட்கள், ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மதுபானம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை அடுத்த 2 மாதங்களுக்குள் 3 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகின்றன.
உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால், பல்வேறு வீட்டு உபயோக பொருட்களின் விலையை உயர்த்த நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அதன்படி, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பால் பொருட்களின் விலையும், ஏசி, குளிர்சாதனப் பெட்டி, மைக்ரோவேவ் அவன் (microwave oven) உள்ளிட்ட சாதனங்களின் விலையும் உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மூலப்பொருட்களின் விலை உயர்வால் குறிப்பிட்ட சில பாக்கெட் பொருட்களின் விலையை இரண்டரை முதல் 3 சதவிகிதம் வரை உயர்த்த உள்ளதாக பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரபல பாஷ்-சீமென்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வீட்டு உபயோக பொருட்களின் விலையை 3 முதல் 5 சதவிகிதம் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட துணிகள், அழகு சாதன பொருட்கள், மதுபானங்களின் விலை 8 முதல் 10 சதவீதம் வரை உயரக்கூடும் எனவும் பால் விலை உயர்வால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
வோல்டாஸ் நிறுவன ஏசியின் விலை ஜூன் மாதம் அதிகரிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.இறக்குமதி செய்யப்படும் உதிரி பாகங்களின் விலை அதிகரிப்பு, பணவீக்கம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவையும் விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த விலை உயர்வு, பொருட்கள் நுகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஏப்ரல் – ஜூன் மாத காலாண்டில் கிராமப்புற சந்தைகள் மீள வாய்ப்பிருப்பதாகவும் நுகர்பொருள் துறையை சேர்ந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.