இலங்கை திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்,மதி சுதாவின் ‘வெந்து தணிந்தது காடு’
எமது போர்க்கால வாழ்வு மிகவும் நெருக்கடியானது. மனதை அலைக்கழிக்கும் அந்தக் காலத்தின் ஒரு கீற்றை மௌன சாட்சியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு, சென்றதற்கு முதல், ஞாயிறு ஏற்பட்டடது.
யாரும் திணித்த நிர்ப்பந்தம் அல்ல. நானாகவவே தேடிக் கொண்டதுதூன். என்னை மறந்து அந்த சூழலுக்குள் நானும் ஒருவனாகக் இரண்டறக் கலந்து, கலங்கிக் கிடந்திருந்தேன்.
போரின் இறுதியை நெருங்கும் காலம்.
இராணுவ வீரர்கள் ஒரு புறம்.
விடுதலைப் புலிகள் மறுபுறம்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் தப்பி ஓடிய நிலையில் இவர்களது குடும்பம் மட்டும் ஒரு வித நம்பிக்கையோடு தங்கியிருக்கிறது. தாய் பிள்ளைகள் பேரக் குழந்தைகள் என விரிந்த ஆலமரம். திரையரங்கில் இருந்த அனைவருமே மௌன சாட்சிகளாக அக் குடும்பத்தில் இணைந்திருந்தனர். துப்பாக்கிச் சூடுகளும் எறிகளைத் தாக்குதல்களும், குண்டு வீச்சு விமானங்களுமாக பொழிந்து தள்ளும் நிலையிலும் புலிகளின் பக்கமோ இராணுவத்தின் பக்கமோ பேசும் படமாக இருக்கவில்லை மக்களின் குரலாக அவர்களது துயர்களையே பேசுகிறது.
ஆனால் அதற்கிடையிலும் அவர்களது நாளாந்த வாழ்க்கை நகர்ந்து கொண்டே இருக்கிறது. நகர்த்த வேண்டிய நிர்பபந்தம். சிரிப்பு, அழுகை, காதல், களவு, கிடைக்கும் உணவை பகிர்ந்து உண்ணுதல் என அனைத்துமே.
‘சங்கக் கடையை உடைச்சு சாமான்களை எடுப்பம்’
‘… வீட்டுச் சனங்கள் வீட்டை விட்டுப் போட்டுது. அவங்கடை காணியிக்கை நிக்கிற தென்னை மரங்களை வெட்டிக் கொண்டு வந்து எங்கடை பங்கருக்கு பாதுகாப்பாக மேலை போடுவம்.’
நிலைமை போசமடையும் போது தங்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதே முக்கியமாகிப் போகிறது. அறம் காப்பது நினைவிற்கு வருவதே இல்லை. அதுதானே நிஜமான வாழ்க்கை. அதுதான் திரையிலும் வருகிறது.
மிகவும் சூசமாகவும் கலைத்துவமாகவும் பல காட்சிகள் ஆழ்ந்த கருத்தைச் சொல்லி நகர்கின்றன.
வீதியில் நின்ற மோட்டர் சைக்கிளில் வயரை வெட்டி, பேரன் பெற்ரோல் எடுத்துக் கொண்டு வாறான்.
‘ஏன் அப்படிச் செய்தாய்?’ என்று கேட்டபோது,
‘அவர் அங்காலை குண்டுபட்டு செத்துக் கிடக்கிறார்.
அவருக்கு ஏன் பெற்றோல்’ என்ற பகிடியாகச் பதிலளிக்கிறான்.
எல்லோரும் வெளியேறிய பின்னர் மகன் வந்து தன்னை வந்து சைக்கிளில் ஏத்திக்கொண்டு போவான் எனக் காத்திருக்கிறாள் பாட்டி. அப்ப அங்கை வந்த இயக்க டாக்டர். தன் கழுத்தில் இருந்த இயக்க அடையாளத் தகடு, சையனைட் குப்பி ஆகியவற்றை ஒவ்வொன்றாகக் கழட்டி பாட்டி இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு ஆணியில் கொழுவுகிறார். இயக்க டாக்டர் வழமையான இயக்கத்து டாக்டருக்குரிய சேட் போட்டிருக்கவில்லை. இப்ப அணிந்திருந்த சேட் அவளின் கண்ணில் பட,
‘உந்த சேட் எங்கிருந்து கிடைத்தது?’ எனக் கேட்கிறாள்.
‘வழியிலை ஒருதன் செல் பட்டு செத்துக்கிடக்கிறான். அதைத்தான் கழற்றி எடுத்துப் போட்டனான்’
பாட்டி அருகில் தொங்கிய சையனைட் குப்பியை வாயில் வைக்கிறாள். ஏன் வைத்தாள் ? அவளுக்கு என்ன நடந்தது? இவை பற்றி நான் சொல்லப் போவதில்லை. நீங்களே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
பாட்டி நடிக்கவில்லை. பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.
வெற்றிச்செல்வி , மதி சுதா MaThi Sutha , சுட்டிப் பையன் என அனைவருமே சிறப்பாக நடித்திருந்தனர்.
இயற்கையில் எப்போதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் வெற்றிச்செல்வி முற்றிலும் எதிர்மாறாக கவலை சூழ்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் அம்மாவாக.
படம் முடிந்து வெளியே வந்தபோது படக் குழுவினர் படம் பற்றிய கருத்தைக் கேட்டனர்.
கட்டை விரலை உயர்த்தி ‘உச்சம்’ என்ற கருத்துவருமாறு சைகை காட்டினேன்.
காரணம் என்னால் பேச முடியவில்லை. மனம் விக்கித்து நின்றது. சொல்வதற்கு எத்தனையோ விடயங்கள் இருந்தன என்பதை இப்போது பின்நோக்கிப் பார்க்கும் போது தெரிகிறது. ஆயினும் வார்த்தைகள் கோரவில்லை.
இன்னமும் அந்த நிலைதான். படம் பார்த்து சுமார் இரண்டு வாரங்கள் ஆகப் போகிறது. ஆயினும் அந்த துயர் மிகு வாழ்விலிருந்து இன்னமும் விடபடவே முடியவில்லை.
மீண்டும் இந்த வார இறுதியில் யாழ் ராஜா விலும் பருத்தித்துறை SS யிலும் திரையிட இருக்கிறார்கள்.
நீங்களும் எமது வரலாற்றில் துயர்மிகு கணங்களில் ஒருதரம் மூழ்கி எழுங்கள்.
எம்.கே.முருகானந்தன்