ரோகிணி ஐஏஎஸ் பற்றி எதுவும் பேசாதீங்க.. ரூபா ஐபிஎஸ்-க்கு தடை போட்ட பெங்களூரு நீதிமன்றம்
கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி மீது ஐ.பி.எஸ். ரூபா பொதுவெளியில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அண்மையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ரோகிணி சிந்தூரி, மைசூரு மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மகேஷுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தாகவும் ஆனால் தற்போது மகேஷுடன் ரோகிணி சமாதானம் பேசுவதாக புகார்களையும் ரூபா முன்வைத்திருந்தார்.
உலகமே கொரோனா பாதிப்பில் இருந்த போது, 2021ம் ஆண்டு அரசு குடியிருப்பில் ரோகிணி வசித்த வீட்டில் சொகுசு நீச்சல் குளம் கட்டியதாகவும், ரூபா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கோலார் பகுதியில் பணியில் இருந்த ஐஏஎஸ் அதிகாரி ரவி இறப்புக்கும் ரோகிணிக்கும் தொடர்பு உள்ளதா என்றும் சந்தேகமும் எழுப்பியுள்ளார். பல்வேறு ஊழல் புகார்களிலும் ரோகிணிக்கு தொடர்பு உட்பட சுமார் 20 புகார்களை ரோகிணி மீது ரூபா அடுக்கியுள்ளார்.
2 பெண் உயர் அதிகாரிகள் இடையிலான இந்த கருத்து மோதல் முற்றியதை அடுத்து, இரண்டு பேரையும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா எழுத்துப்பூர்வமாகவும், சமூக வலைதளத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால், மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று ரோகிணி எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகளை பரப்புவதற்கு தடை விதிக்கக் கோரி, ரோகிணி தொடர்ந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், ரூபா உள்ளிட்ட யாரும், ரோகிணி குறித்து எவ்வித அவதூறு கருத்தும் கூறக்கூடாது என்று உத்தரவிட்டது. மேலும் எதிர்தரப்பினர் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள நீதிமன்றம், விசாரணையை மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.