உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடியும்! – சுமந்திரன் தெரிவிப்பு.
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவோம் என்று நீதிமன்றில் தேர்தல்கள் ஆணைக்குழு வாக்குறுதி வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாராவது தடங்கல் ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. உள்ளூராட்சித் தேர்தலைப் பேசுபொருளாக்கி சர்ச்சையை உருவாக்கி மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவும் சில முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி சார்பிலும் அவ்வாறான முயற்சிகள் நடைபெற்றாலும் தேர்தல் மிகவும் அத்தியாவசியமான விடயம். ஒரு நாடு ஜனநாயக நாடா? இல்லையா? என்பதை தீர்மானிப்பதற்கு, உரிய காலத்திலே தேர்தல்கள் கிரமமாக நடத்தப்படுவது முக்கியமான ஒரு அம்சமாகும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது அந்தப்படியே நடத்தப்பட வேண்டும். சுயாதீன தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. அதற்கு ஏற்ற விதமாக நிதியமைச்சும் ஆரம்ப விடயங்களுக்கென்று 100 மில்லியன் ரூபா பணம் கொடுத்துள்ளது. அதற்கு மேல் எதையும் நிதியமைச்சின் அனுமதி இல்லாமல் கொடுக்க முடியாது என்று திறைசேரியின் செயலர் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்திருக்கின்றார்.
நிதி அமைச்சராக இருப்பவர் நாட்டினுடைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அதேபோல ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் இருப்பவரும் அவரே. அவரது ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் கொழும்பு மாநகர சபையை அண்டிய பகுதிகளில் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
எங்களைப் பொறுத்தவரை மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட்டாகவேண்டும். அதை தேர்தல் ஆணைக்குழு செய்யும் என எதிர்பார்க்கின்றோம். அரச பணியாளர்கள், அமைச்சர்கள், ஏன் ஜனாதிபதியாகக் கூட இருக்கலாம், யாரும் தேர்தலை நடத்துவதை தடுக்கும் செயற்பாட்டுக்கு உதவியாக இருக்கக் கூடாது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இணங்கி – ஒத்துழைத்துச் செயற்பட தவறுகின்றமை அரசமைப்பின் 104 (ஜி) (ஜி) (1) பிரிவுக்கு அமைவாக தண்டனைக்குரிய குற்றமாகும். அதைவிட தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்துக்கு வாக்குறுதியளித்துள்ள நிலையில் அதனை நிறைவேற்றுவதை தடுக்கும் வகையில் எவராவது செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்படலாம்” – என்றார்.