ஜனாதிபதி அலுவலகத்திற்கு வாங்கிய டொயோட்டா கார் மாயம்
ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளின் பாவனைக்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் Toyota Prius ஹைபிரிட் காருக்கு என்ன நடந்தது எனவும், இது தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் 2013ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டதாக சுங்கப் பதிவேடுகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதற்கான சுங்க வரியாக 18 இலட்சம் ரூபாவை ஜனாதிபதி அலுவலகமே செலுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், இந்த வாகனம் தொடர்பான கோப்பு எதுவும் தற்போது ஜனாதிபதி அலுவலகத்தில் இல்லை எனவும், அதே கார் தற்போதைய ஜனாதிபதி அலுவலக வாகன பகுதியிலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் அந்த வாகனத்தை யார் பயன்படுத்துகிறார்கள் என்பது கூட தெரியவரவில்லை, எப்படியும் இந்த கார் ஜனாதிபதி அலுவலகத்தின் தேவைக்கேற்ப கொண்டு வரப்பட்டதாக சுங்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் இதுவரை எவ்வித விசாரணையோ அல்லது தேடலோ மேற்கொள்ளாததால் ஜனாதிபதி அலுவலகம் என்ற போர்வையில் இது வேறு மூன்றாம் தரப்பினருக்கு சென்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த வாகனம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.