சிறுவர் இல்ல சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த காப்பாளரின் கணவருக்கு விளக்கமறியல்!
இரத்தினபுரி – ரக்வான பிரதேசத்தில் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் நடத்தப்படும் சிறுவர் இல்லத்தில் 11 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் இல்ல பெண் காப்பாளரின், 60 வயதையுடைய கணவரை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மடுல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனாதை இல்லத்தில் வசிக்கும் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக வந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் சிறுவர் இல்லத்தில் உள்ள 17 சிறுமிகளில் 11 பேர் இந்நபரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு , நேற்று பெல்மடுல்ல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவரால் பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான ஒரு சிறுமி தற்போது சிகிச்சைக்காக கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் அவரது வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், ஏனைய சிறுமிகளையும் மருத்துவரிடம் ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.