மகளிர் டி20 உலக கோப்பையை 6வது முறையாக வென்றது ஆஸ்திரேலியா.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தென்ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் விக்கெட் 6 இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 53 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் மரிசான் கேப், ஷப்னிம் இஸ்மாயில் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியின் துவக்க வீராங்கனை லாரா வால்வார்ட், ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ரன் குவித்தார்.
மறுமுனையில் டாஸ்மின் பிரிட்ஸ் 10 ரன்கள், மரிசான் கேப் 11 ரன், கேப்டன் சுனே லஸ் 2 ரன் என விரைவில் விக்கெட்டை இழந்தனர். அதிரடி காட்டிய லாரா வால்வார்ட் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அவரது விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரைத் தொடர்ந்து சோல் டிரையான் 25 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். அனெக் போஸ்ச் 1 ரன் மட்டுமே அடித்தார். கடைசி ஓவரில் 27 ரன்கள் தேவை என்ற நிலையில், 7 ரன்களே எடுத்தது. கடைசி வரை போராடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.
இதனால் ஆஸ்திரேலிய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையை 6 முறை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.