இத்தாலியில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு பாறையில் மோதி 43 பேர் பலி.

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரைக்கு அருகே புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு பாறைகளில் மோதி விபத்துக்குள்ளானது.
இதுபற்றி தகவல் அறிந்த இத்தாலி கடலோர காவல்படை மற்றும் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை நிலவரப்படி 43 சடலங்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். 80 பேர் உயிர் பிழைத்தனர். அவர்களில் சிலர் படகு விபத்துக்குள்ளானதும் நீந்தி கரைக்கு வந்துள்ளனர்.
கலப்ரியா பிராந்தியத்தின் ரிசார்ட் அருகே கடற்கரைக்கு சில மீட்டர் தொலைவில் உள்ள பாறைகள் மீது படகு மோதியதாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வேறு யாரேனும் உயிர் பிழைத்திருக்கிறார்களா? என கடற்பகுதியில் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்த கோர சம்பவத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார். மேலும் கடலில் அதிக உயிரிழப்புகளைத் தவிர்க்க, முறையற்ற வகையில் புலம்பெயரும் பயணங்களை தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்தார்.