வடக்கு மீனவர்களுக்கு பாதிப்பில்லாது தீர்மானம்! – அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்றும் ஜனாதிபதி தெரிவிப்பு.
“இந்திய மீனவர்கள் அனுமதிபெற்று வடக்குக் கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பான விடயம் இன்னமும் பரிசீலனையிலேயே உள்ளது. வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நாம் தீர்மானத்தை மேற்கொள்வோம்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வடக்கு கடற்பகுதியில் அனுமதி பெற்று இந்திய மீனவர்கள் மீன்பிடிக்கலாம் என்று தெரிவித்த கருத்துக்கு வடக்கு மீனவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்கின்றது. இதனால் இரண்டு நாடுகளின் நட்புறவில் பாதிப்பும் ஏற்படக்கூடும். எனவே, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு விரைந்து நிரந்தரத்தீர்வு காணவேண்டும்.
இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வடக்கிலும், தமிழகத்திலும் பலர் அரசியல் ஆதாயமும் தேடுகின்றனர். மீனவர்களின் வாழ்வில் எவரும் விளையாடக்கூடாது.
நீங்கள் என்னிடம் கேட்ட விடயம் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பில் அமைச்சரவை முடிவு எடுக்கும். அதனை நாடாளுமன்றத்திலும் சமர்ப்பித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வடக்கு மீனவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு அந்தத் தீர்மானம் அமையும்” – என்றார்.