‘மே 9’ கலவர அறிக்கையில் சிக்கிய ஜெனரல் சவேந்திர! – சி.ஐ.டி. விசாரணைக்கும் சிபாரிசு.
2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நேரம் இராணுவத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட சவேந்திர சில்வா எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தக் கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கலவரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட தலைமையில் மூவர் கொண்ட குழுவை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்திருந்தார்.
அந்தக் குழு விசாரணைகளை நிறைவு செய்து இப்போது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப் படை, அவசர சந்தர்ப்பத்தின்போது அழைக்கக் கூடிய இராணுவத்தின் கலகம் அடக்கும் பிரிவு, மொபைல் பாதுகாப்பு வாகனங்கள் ஆகிய வசதிகள் முகாமுக்குள் இருந்தும்கூட இவற்றைப் பாவிப்பதற்காக ஜெனெரல் சவேந்திர சில்வா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கவில்லை என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சவேந்திர தொடர்பில் சி.ஐ.டி. விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று அந்தக் குழு சிபாரிசு செய்துள்ளது.
இந்த அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதை நாடாளுமன்றில் வெளிப்படுத்துமாறு மொட்டுக் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மொட்டுக் கட்சி எம்.பிக்கள் 115 பேர் கையெழுத்திட்டு ஜனாதிபதியிடம் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.