தோழர் சுப்பையா மாஸ்டருக்கு(கெளரி காந்தன்) செவ்வணக்கங்கள்

1985 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிகள் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் தலைமை குழுவில் குத்துவெட்டுகளும் குழிபறிப்புகளும் நடந்து கொண்டிருந்தன.
இந்தியாவில் பயிற்சிக்காக சென்ற தோழர்களில் நூற்றுக்கணக்கானோர் உள்ளக முரண்பாட்டின் காரணமாக கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்கின்ற செய்திகள் எங்கள் தமிழீழ கனவுகளை சிதைத்துப் போட்டன.
இயக்க தலைமைப் பீடத்தின் விருப்பத்துக்கு மாறாக உட்கட்சி போராட்டத்துக்கான முதலாவது மாநாடு ஒன்றை நடத்துவதற்காக நாங்கள் யாழ்ப்பாணத்தில் கூடியிருந்த பொழுதுதொன்றில்தான் “தோழர் சுப்பையா’ என எனக்கு அவர் அறிமுகமானார்.
உட்கட்சி ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதே புரட்சிகர அரசியலின் முதல் பணி என்பதை வரலாறு எனக்கு அவரூடாகத்தான் சொல்லித் தந்தது.
இளம் தோழரான எனக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள அன்று ஆயிரம் விடயங்கள் இருந்தன.
அன்றிலிருந்து இன்று வரை அவர் ஓயாத தனது எழுத்துக்களூடாக எனக்கு மட்டுமல்ல பல நூறு தோழர்களுக்கும் ஆசானாகவே வாழ்ந்து வந்தார்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாட்டாளி மக்களின் விடுதலையையும் சமூகநீதியையும் வென்றெடுப்பது குறித்து அவர் மட்டுமல்ல நாங்கள் கொண்டிருந்த கனவுகளையும் சுமந்து கொண்டு… தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி அகதிகள் முகாமில் உயிர் நீத்தார்.
எங்கள் தோழரான
சுப்பையா மாஸ்டருக்கு(கெளரி காந்தன்)
செவ்வணக்கங்கள்..
