போராட்டங்கள் மூலம் அரசை மிரட்ட முடியாது! – எதிர்க்கட்சிகளுக்கு ரணில் எச்சரிக்கை.
“நாட்டினதும் மக்களினதும் நலனைக் கருத்தில்கொண்டு தற்போதைய அரசு சீரான பாதையில் பயணிக்கின்றது. இதைப் குழப்பியடிக்க எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர். மக்களை அணிதிரட்டிப் போராட்டம் நடத்துவதன் மூலம்
அரசை மிரட்ட முடியாது என்று எதிர்க்கட்சியினரிடம் தெரிவித்துக்கொள்கின்றேன்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
‘தேர்தலைப் பிற்போடுகின்ற சூழ்ச்சிக்கு எதிரான எதிர்ப்பு’ என்ற தொனிப்பொருளில் கொழும்பில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்த போராட்டம் தொடர்பிலும், அந்தத் போராட்டத்தை அடக்கப் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் குறித்தும் கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி ஆகிய எதிர்க்கட்சிகள் தத்தமது பலத்தைப் போட்டியிட்டுக் காட்டுவதற்காக மக்களைப் பலிக்கடாவாக்கப் பார்க்கின்றன.
நீதிமன்றம் ஊடாகத் தடை உத்தரவு பெறப்பட்ட பகுதிகளுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய ஜே.வி.பியினர் அத்துமீறிப் பிரவேசித்த போதே அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
நீதிமன்றத்தின் உத்தரவைக் கூட மீறி நடக்கும் ஜே.வி.பியினர் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி எப்படி நாட்டை மீளக்கட்டியெழுப்பப் போகின்றனர்?
ஜே.வி.பியினரின் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் அவர்களின் வீர வசனங்களைக் கேட்பதற்கு மக்கள் அணிதிரள்வது வழமை. ஆனால், தேர்தல் பெறுபேறுகளின் போது ஜே.வி.பியினரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதும் வழமை” – என்றார்.