மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு ஆளுநர் உட்பட்டவர்.. உச்சநீதிமன்றம் அதிரடி..!
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் அரசுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அதேபோல பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது. இதனிடையே சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு, ஆளுநர் அனுமதி வழங்கவில்லை என்று கூறி பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஆளுநர் கேட்கிற தகவல்களை மாநில அரசு வழங்க வேண்டிய கடமை உண்டு. அதே நேரத்தில் சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக அமைச்சரவையின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு என்று கூறி, ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு உட்பட்டவர் என பல்வேறு வழக்குகளில் அளித்த தீர்ப்பை சுட்டிகாட்டியது. கூட்டத் தொடரை கூட்ட அமைச்சரவை கோரிக்கை விடுத்தால், அதனை ஆளுநர் ஏற்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
பட்ஜெட் கூட்டத் தொடர் கூட்டுவதை ஆளுநர் தாமதப்படுத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. மேலும், மாநில முதலமைச்சர் மற்றும் ஆளுநர் அரசியல் சாசன கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். அரசியல் ரீதியான கொள்கை வேறுபாட்டை வேலையில் காட்டக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.