ஈஸ்டர் வழக்கில் சிக்கியுள்ள மைத்திரி, விடுவிக்கப்பட்ட ரணில் !

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (01) உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க தற்போது நிறைவேற்று ஜனாதிபதியாக இருப்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என அவரது சட்டத்தரணிகள் ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை முன்வைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுத் தலைவர் நிலந்த ஜயவர்தன உள்ளிட்டோருக்கு எதிராக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலை அறிந்தும் , பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிப்புக்குள்ளான 108 பேர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் நிராகரித்துள்ளதுடன், தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இதனடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை 21,000 ரூபா கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்குமாறு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ மொரேஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகிய இருவர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு அன்று தீவிரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படும் என போதிய தகவல் கிடைத்தும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 108 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.