அன்புஜோதி ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை…அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்..!
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே குண்டலபுலியூரில் அன்பு ஜோதி என்ற பெயரில் ஆசிரமம் செயல்பட்டு வந்தது. அங்கு மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் பராமரிக்கப்பட்டு வந்தனர். அங்கு, திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா என்பவர் காணாமல் போனதாக எழுந்த புகாரின் பேரில் பிப்ரவரி 10ம் தேதி ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரில் அண்மையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது அம்பலமானது. இதனை தொடர்ந்து, ஆசிரமத்தில் தேசிய மற்றும் மாநில மகளிர் ஆணையர் தலைமையில் நேரில் விசாரணை நடத்தி அங்கு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நபர்களை அறைகளில் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியது என பல்வேறு குற்றச் செயல்கள் விசாரணையில் தெரியவந்தன. மேலும் ஆசிரமத்திலிருந்து இதுவரை 16 பேர் காணாமல் போயிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்ரமத்தில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் மீது 13 பிரிவுகளில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆசிரம பணியாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஆசிரமத்தில் 4 ஆண்டுகளாக இருந்த பெண்மணி ஒருவர் பகீர் வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கொடுமை தாங்க முடியாமல் 4 ஆண்டுகளில் 2 முறை ஆசிரமத்தில் இருந்து தப்பித்ததாக கூறியுள்ளார். ஏற்கனவே, அன்பு ஜோதி ஆசிரமத்தில் இதுவரை 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியந்துள்ளது. மேலும் சில பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆசிரமத்தில் இருந்து வீடு திரும்பிய பெண்களிடமும் விசாரித்த பின் முழு விபரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் சிபிசிஐடி நீதிமன்றத்தில் தாக்கல் அறிக்கை வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் எட்டு வகையான 41,009 மனநல மாத்திரைகள் ஆசிரமத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் மாத்திரைகள் அவர்களுக்கு எப்படி கிடத்தது என்பது தெரியவில்லை என்று சிபிசிஐடி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கும் மாத்திரைகள் ஆசிரமத்திற்கு சென்றது எப்படி கிடைத்தது என்பது பற்றி விசாரிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு, கர்நாடக போலீசாரின் போலி லெட்டர் பேட் மற்றும் சீல்களை பயன்படுத்தி ஆசிரமவாசிகளை இடமாற்றம் செய்தது அம்பலமாகியுள்ளது. அன்புஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போனதாக சொல்லப்பட்ட நபர் பெங்களூரூவில் புதைக்கப்பட்டதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.