கான்பூர் சதி வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை!
கடந்த 2017 ஆம் ஆண்டு போபால்-உஜ்ஜைன் பயணிகள் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருந்தது என்.ஐ.ஏ. விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
மேலும் இக்குழு பல்வேறு இடங்களில் இருந்து சட்டவிரோதமாக ஆயுதங்கள்,வெடிபொருட்களை சேகரித்ததும் அம்பலமானது. இந்நிலையில், இவ்வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
கான்பூர் சதி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.