34 ஆண்டுகளுக்கு பிறகு எம்.எல்.ஏ ஆன ஈவிகேஎஸ் இளங்கோவன்
பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தை விட்டு விலகி திமுகவை தொடங்கியபோது ஈவிகே சம்பத் அவருடன் இணைந்து பயணித்தார். பின்னர் ஈவிகே.சம்பத் காங்கிரசில் சேர்ந்தார். தந்தையுடன், இளங்கோவனும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஆனார். அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் ரசிகரான இளங்கோவன், தனது அரசியல் குருவாகவும் சிவாஜி கணேசனையே ஏற்றிருந்தார். அந்த அடிப்படையில், 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிவாஜி கணேசனின் பரிந்துரையால் சத்தியமங்கலம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக வேட்பாளரைவிட இருமடங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
இளங்கோவனும் அவரது தந்தையும் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகிக்க, அவரது தாயார் சுலோச்சனா சம்பத், அதிமுகவின் அமைப்பு செயலாளராக இருந்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைகுரியவராகவும் சுலோச்சனா விளங்கினார். காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர்களால், அப்பா என்றும் தன்மான தலைவர் என்றும் அழைக்கப்படும் ஈவிகேஎஸ், எப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் அதனை தாங்கி பிடித்தவர்.
அதிமுகவுடனான கூட்டணியை எதிர்த்து 1996ஆம் ஆண்டு ஜி.கே. மூப்பனார் தனிக்கட்சியை தொடங்கிய போது, காங்கிரஸ் கட்சியிலேயே இருந்த மிக சில சீனியர்களில் ஈவிகேஎஸ்-சும் ஒருவர். பின்னர் 2000ஆம் ஆண்டில், முதல்முறையாக காங்கிரஸ் கமிட்டியின் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார். 2001ல் மூப்பனாரின் மறைவுக்கு பின்னர், அவரது மகன் ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் திரும்பியதற்கு இளங்கோவனின் முயற்சிகளே காரணம். இது மட்டுமல்லாமல் 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததற்கு இளங்கோவனே முக்கிய காரண கர்த்தாவாக விளங்கினார். அச்சமயத்தில் காங்கிரஸ் ஜனநாயக பேரவை என்ற கட்சியை சிதம்பரம் நடத்திக் கொண்டிருந்தார்.
2004ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இதில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய அவர், சுமார் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த காலகட்டத்தில் 2004 முதல் 2009 வரை அவர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
2009, 2014 ஆண்டுகளில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2019 மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 39 இடங்களில் 38ல் வென்றது. இருப்பினும், ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்ட தேனியில் ஓபிஎஸ் மகன் ஓபி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அதிரடி பேச்சுக்களுக்குப் பெயர் போன ஈவிகேஎஸ்.இளங்கோவன், தொடர் தோல்விகளால் தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்தார். ஆனால், காலத்தின் கட்டாயமாக மகனின் இறப்பை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, சுமார் 33 ஆண்டுகளுக்கு மீண்டும் சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.