அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஓ. பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி, கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியிருந்தது.

இந்த பின்னணியில், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டது, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனோஜ் பாண்டியன் தரப்பில், கட்சி நிறுவனரின் கொள்கைகளுக்கு விரோதமாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், கட்சி விதிகளுக்கு விரோதமாக, எந்த விளக்கமும் கேட்காமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

கட்சி விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும்,

பொதுக்குழுவுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் மனோஜ் பாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காரணமாக, அதிமுக எம்.எல்.ஏ.வாக எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற இயலாத சூழல் உருவாகியுள்ளதால், எதிர் தரப்பினரின் விளக்கங்களைக் கேட்காமல், தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சியினர் ஒற்றைத் தலைமையை விரும்பினார்கள் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் மனோஜ் பாண்டியன் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், எதிர்தரப்பினரின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என, பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, மனுவுக்கு மார்ச் 15ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி, அதிமுக கட்சி, இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.