இந்தோனேசியாவில் எரிபொருள் கிடங்கில் பயங்கர தீ விபத்து- 14 பேர் பலி.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 180 பேர் 37 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில 14 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அரசு நடத்தும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான இந்த சேமிப்பு கிடங்கு, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியை ஒட்டி அமைந்திருந்ததால் பீதி ஏற்பட்டது. தீ பரவத் தொடங்கியதும் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்குதல் காரணமாக குழாய் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.