வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்பு…காவல்துறை விளக்கம்..!
தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்துள்ள வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரவின. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதிகம் பகிரப்பட்ட இந்த வீடியோக்கள், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் கவனம் வரை சென்ற நிலையில், தனது டிவிட்டர் பதிவில் அவர் கவலை தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பீகார் மாநில சட்டப்பேரவையில் நேற்று எதிரொலித்தது. அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தப் பிரச்னையை நேரில் ஆராய தமிழ்நாட்டிற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவை அனுப்பி வைப்பதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு ரயில்கள் மூலம் கிளம்பிச் சென்றனர். இந்த நிலையில் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான தகவல்களை பீகாரில் பரப்பி வருவதாகவும் அத்தகைய வீடியோக்கள் அனைத்தும் பொய்யானவை அவற்றை நம்ப வேண்டாம் பரப்ப வேண்டாம். தமிழகத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுவதாக திருப்பூர் மாநகர போலீஸார் ஒலி பெருக்கியை ஆட்டோவில் பொருத்தி அறிவிப்பு செய்து வருகின்றனர்.
வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “புலம்பெயர் வடமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்கு மாறான தகவல் இணையதளத்திலும், ஊடகத்திலும் விஷமிகளால் பரப்பப்படுகிறது. அப்படி பொய் செய்திகள் பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் தெய்னிக் பத்திரிகையின் ஆசிரியர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி மாவட்டம் சென்ட்ரல் காவல் நிலையத்தில் தன்வீர் போஸ்ட் பத்திரிகை உரிமையாளர் முகமது தன்வீர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தலை மறைவாக உள்ள இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தமிழ்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்புடன் அமைதியாக வசித்து வருகிறார்கள். அமைதியை சீர்குலைத்து பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பொய் செய்திகளை பரப்புவோர் விவரங்கள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.