இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் போர்க்கொடி!
“வடக்கு மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கவில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கில் நடத்திய கூட்டங்களில் அவ்வாறு எவரும் தெரிவிக்கவில்லை. எல்லோரும் சர்வதேச விசாரணையையே கோரினார்கள். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாறு அறிக்கையிட்டதன் ஊடாக அவர்கள் மீதிருந்த கொஞ்ச நம்பிக்கையும் இழக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
‘பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதில் சர்வதேச பொறிமுறையொன்றை ஆதரிக்கும் தரப்பினர், அரசின் எத்தகைய கட்டுப்பாடுமின்றி பாதிக்கப்பட்ட தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடன் செயற்திறன்மிக்க, நேர்மையான உறுப்பினர்களை உள்ளடக்கி நிறுவப்படக்கூடிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்ற உள்ளகப்பொறிமுறைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்’ என்று வடக்குப் பயணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ள அறிக்கையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சிவஞானம் சிறீதரன்
ஆணைக்குழுவின் இந்த அறிக்கையிடல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிடுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தூதுக்குழுவாகத்தான் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் வடக்குக்கு வருகை தந்தார்கள். அவர்கள் இங்கு சிலரைச் சந்தித்தார்கள். அவர்களை மூளைச்சலவை செய்துள்ளார்கள். எமது மக்கள் – பாதிக்கப்பட்டவர்கள் ஒருபோதும் இலங்கையின் உள்ளக விசாரணைக்கு இணங்கமாட்டார்கள்.
இந்த ஆணைக்குழு பொய்யான அறிக்கையை வெளியிட்டிருக்கின்றது. சர்வதேச சமூகத்துக்கு பச்சைப் பொய்யைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கின்றார்கள்.
ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றி தெரிந்தவர்களுக்கு அவரது கபடங்களைப் பற்றியும் தெரியும். அதிலொன்றுதான் இந்த ஆணைக்குழுவின் கபட அறிக்கையும்.
நாம் போர் முடிந்ததிலிருந்து உண்மை கண்டறியப்படவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். அது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடனேயே செய்யப்படவேண்டும். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை” – என்றார்.
சுரேஷ் பிரேமச்சந்திரன்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக தெரிவிக்கையில்,
“உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்கின்றோம் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் சொன்னவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாது. வடக்கு தமிழ் மக்கள் என்று ஆணைக்குழு மொட்டையாகச் சொல்லியிருக்கின்றது. அவர்கள் தங்களுக்கு இவ்வாறு சொன்னவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் தங்களின் பிரதிநிதிகளாகச் சிலரை தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் இப்படியொரு கருத்தை முன்வைக்கமாட்டார்கள். அவர்கள் கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கூட சர்வதேச விசாரணையைக் கோரித்தான் கடிதம் அனுப்பியிருந்தார்கள். எனவே, இவ்வாறான உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொண்டவர்களை ஆணைக்குழு வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு இல்லையெனில் இதனை வடக்கு மக்கள் சார்பான அறிக்கையாக ஒருபோதும் சொல்லக்கூடாது.
எம்மைப் பொறுத்தவரையில் குற்றமிழைத்தவர்களே விசாரணையைச் செய்யமுடியாது. அதனால்தான் சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். உள்ளகப் பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. சர்வதேசப் பொறிமுறை ஊடாகத்தான் நீதி கிடைக்கும்.
உள்ளகப் பொறிமுறை ஊடாக உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்துக்கு காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரைக்கூட கண்டுபிடிப்பதற்கான ஆணை இல்லை. அதனைவிட அந்த அலுவலகத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் உறவினர்கள் கூட நிராகரித்துள்ளனர்.
இவ்வாறானதொரு இலட்சணத்தில் வடக்கு தமிழ் மக்கள் உள்ளகப் பொறிமுறையை கோருகின்றனர் என்ற இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கருத்து நகைப்புக்கிடமானது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இவ்வாறு சொல்வதன் ஊடாக உண்மையை மூடிமறைக்கின்றது. இவ்வாறு செய்வதன் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மீதுதான் நம்பிக்கையீனம் ஏற்படும்” – என்றார்.
சி.வி.விக்னேஸ்வரன்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில்,
“எப்படியான உள்ளகப்பொறிமுறையும் நீதியைத் தராது. சர்வதேச பங்களிப்புடன் – பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படவேண்டும்.
சர்வதேச விசாரணைப் பொறிமுறையையே நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்” – என்றார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிடுகையில்,
“இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை அப்பட்டமான பொய். அந்த ஆணைக்குழு மீது இருந்த அதி குறைந்த நம்பிக்கையையும் இழந்துவிட்டமையைத்தான் இந்தச் செய்தி வெளிப்படுத்துகின்றது.
பொறுப்புக்கூறல் சம்பந்தமாக ஒருபோதும் உள்ளகப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் வடக்கில் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் எமது கட்சி பங்கேற்றிருந்தது. அந்தக் கூட்டத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளகப் பொறிமுறைக்கு ஆதரவான கருத்து எவராலும் முன்வைக்கப்படவில்லை.
அதேவேளை, எமது கட்சி கலந்துகொள்ளாத ஏனைய கூட்டங்களிலும் இவ்வாறானதொரு கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை என்பதை நாங்கள் நம்பகரமாக அறிந்திருக்கின்றோம். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வடக்கு மக்கள் இவ்வாறு சொல்லியதாகத் தெரிவித்து வெளியிட்ட அறிக்கை அப்பட்டமான பொய்தான்” – என்றார்.