அகதியாக பிரான்ஸ் வந்த யாழ். இலங்கையர் வெட்டிக் கொலை

கடந்த 2023 பிப்ரவரி 26ம் திகதி யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சட்ட விரோதமாக பிரான்ஸ் நாட்டிற்கு வந்த ஒருவர் , பிரான்ஸ் நாட்டில் சட்டத்துக்கு புறம்பாக மறைந்து வாழ்ந்து வந்த நிலையில் , அடைக்கலம் என அந்நாட்டவரது வீடு ஒன்றில் மறைந்திருந்து , அதே வீட்டில் வேலை செய்து வந்த நிலையில் , தங்கியிருந்த வீட்டின் பிரெஞ்சு நாட்டு முதலாளியாலேயே வெட்டிக் கொல்லப்பட்டு , அவரது சடலம் குப்பை மேட்டில் வீசப்பட்ட செய்தி அதிர்ச்சியை அளித்துள்ளது.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் சபேசன் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் , பிரான்ஸ் நாட்டிற்கு வந்த போதும் அவருக்கு பணிபுரிய விசா கிடைக்காததால் , வேலைக்கு என சென்றிருந்த நிலையில், பிரான்ஸ்காரர் ஒருவது வீட்டில் பதுங்கி இருந்து கொண்டு , அதே வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வசிக்கும் அவரது மனைவிக்கு, அவர் பணிபுரியும் வீட்டின் தொலைபேசி இலக்கம் மற்றும் முகவரி அவரால் வழங்கப்பட்டிருந்ததுடன், கடந்த வாரம் அவரை தொடர்பு கொள்ள அவரது மனைவி இலங்கையிலிருந்து பலமுறை தொலைபேசி வழி அழைத்தபோது, சில நாட்களாக அவரைக் காணவில்லை என வீட்டார் மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.
இதை அறிந்த சந்தேகம் அடைந்த இறந்தவரது மனைவி , காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு பிரான்ஸ் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பிரான்ஸ் வில்லூப்பே (Villeupe) நகரின் அதிகாரிகளும் பொலிஸாரும், குறித்த நபரை தேடிய போது , அவர் கொலை செய்யப்பட்டிருப்தை கண்டுபிடித்துள்ளனர்.
இறந்தவர் பணிபுரிந்த வீட்டின் ஏனைய ஊழியர்களிடம் நடத்திய விசாரணைகள் மற்றும் சி.சி.டி.வி. கேமரா சோதனைகளை ஆராய்ந்ததில் அவர் எப்படி வெட்டிக் கொல்லப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
போலீசார் , வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்திய போது, குப்பை மேட்டில் எறியப்பட்ட அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டின் வில்லூப்பே மாகாண போலீசார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.