எந்தத் தேர்தல் நடந்தாலும் வெல்லப்போவது நாமே! – மார்தட்டுகின்றார் பஸில்.
“நாட்டில் எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றியடையும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து பிற்போட முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இந்த வருடமும் அடுத்த வருடமும் தேர்தல்களுக்கான வருடங்கள். ஆனால், எந்தத் தேர்தல் முதலில் நடக்கும் என்று எம்மால் ஊகிக்க முடியவில்லை. தேர்தல் தொடர்பில் எல்லோரிடமும் சந்தேகங்கள் எழுகின்றன.
எந்தத் தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ளும் திராணி சிறிலங்கா பொதுஜன பெரமுனவிடம் உண்டு.
எந்தத் தேர்தல் நடந்தாலும் மொட்டுக் கட்சி வெல்வது உறுதி. உள்ளூராட்சிசபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்று மூன்று தேர்தல்களையும் மொட்டுக் கட்சி சந்தித்தது. எந்தத் தேர்தலிலும் தோற்ற வரலாறு மொட்டுக் கட்சிக்கு இல்லை.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியது போல் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரம்தான் அரசை மாற்ற முடியும்.
அதேவேளை, உள்ளூராட்சிசபைத் தேர்தலையும் தொடர்ந்து பிற்போட முடியாது. மக்களின் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்” – என்றார்.