கச்சதீவுத் திருவிழாவில் குறைபாடுகள் தாராளம்! – பாகுபாடு காட்டப்பட்டதாக இரு நாட்டு பக்தர்களும் குமுறல்.
கச்சதீவு பெருநாள் ஒழுங்கமைப்பு தொடர்பாக இந்திய மற்றும் இலங்கைப் பக்தர்களால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திலிருந்து வருகை தந்த பக்தர்கள், தமக்கு வழங்கிய உணவு திருப்தியாக அமையவில்லை எனவும், ஏதோ உணவை வழங்க வேண்டும் என்பதற்காக வழங்கியமை போன்று அமைந்தது எனவும் குறிப்பிட்டனர்.
மலசலகூடமும் ஒழுங்காக இல்லை எனவும், இவ்வளவு பக்தர்கள் வருவார்கள் என்றால் அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு பின்னர் குடிதண்ணீருக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது எனவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.
மேலும், இதே விடயத்தை இலங்கைப் பக்தர்களும் சுட்டிக்காட்டினர்.
விசேட விருந்தினர்களுக்கு ஒருவாறாகவும் பக்தர்களுக்கு இன்னொரு வகையாகவும் பாகுபாடான கவனிப்பே கச்சதீவில் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.