அண்ணாமலை மீது கலவரத்தை தூண்டுவதாக வழக்குப்பதிவு…!
வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் வெளியாகின. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் இடையே அச்சம் உண்டானதால் ரயில்கள் மூலம் சொந்த ஊருக்கு திரும்புவதாக தகவல் வெளியாகின. ஆனால், தாங்கள் ஹோலி பண்டிகை கொண்டாடவே செல்வதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். வடமாநில தொழிலாளர் தோழர்கள் அச்சப்பட வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என்று கூறினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணி கட்சிக்காரர்கள் வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்பு பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பை காப்பார் என்று நம்புகிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அரசுக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டுதல், சாதி, மதம், இனம் தொடர்பாக கலகம் செய்ய தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சென்னை மத்தியப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.