வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு கோயில் பூசாரியான இளைஞர்..!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ளது புகழ்பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில். இந்த கோயிலின் தலைமை அர்ச்சகராக இருந்த நாராயணன் நம்பூதிரியின் மகன் 33 வயதான சாந்தனு. இவர் நாகர் கோயிலில் உள்ள பொறியில் கல்லூரியில் பி.இ. கம்ப்யூடர் சயின்ஸ் பட்டம் பெற்று மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்தார்.
தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனம் ஒன்றிலும் பொறியாளராக பணியாற்றினார். இவரின் மனைவி தேவிகா. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சாந்தனுவுக்கு வேலையை விட்டுவிட்டு கோயிலில் பூசாரியாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தற்போது தனது வேலையை உதறிய அவர், குடும்பம் பரம்பரையாக வேலை பார்த்து வந்த ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், என்ன தான் வருமானம் கிடைத்தாலும் மனத்திற்கு பிடித்த வேலை செய்ய வேண்டும். அது தான் மகிழ்ச்சி என்பதை சில மாதங்களுக்கு முன்னர் புரிந்து கொண்டேன். மேலும், குடும்பத்தை பிரிந்து வேறு நாட்டில் வேலைக்காக இருக்க வேண்டுமா என்ற எண்ணம் பிறந்தது.
எனவே, பகவதி அம்மன் கோயில் பூசாரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனைவி, தந்தை ஆகியோரிடம் கூறினேன். அவர்கள் யாரும் குறுக்கே நிற்கவில்லை. தற்போது பகவதி அம்மனுக்கு சேவையை செய்யும் வாய்ப்பை பெற்று நிம்மதியாக உள்ளேன் என்றார்.