கொலை, தற்கொலை என அதிரும் சுவிஸ் தமிழ் சமூகம்?
தமிழர் ஒருவர் சுவிஸ் நாட்டில் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார் என்ற செய்தி ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்கு இடையில், இளைஞர் ஒருவர் தன்னைத் தானே எரித்துக் கொண்டு மரணத்தைத் தழுவினார் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இரண்டு சம்பவங்களும் பலர் பாத்திருக்க நடைபெற்றுள்ளன.
கொலை நடைபெற்ற 10 நாள் இடைவெளியினுள் நடைபெற்ற தற்கொலை என்பது தமிழர் மத்தியில் என்னதான் நடக்கிறது என்ற துயர் மிகுந்த விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.
அதேவேளை, தற்கொலைக்கான காரணம் எதுவாக இருக்கக் கூடும் என்ற ஊகங்களும் அவரவர், வசதிக்கு ஏற்ப உலா வருவதையும் அவதானிக்க முடிகின்றது.
வழக்கம் போன்று, தமிழ்க் கலாசாரத்தின் காவலர்கள்(?) என சொல்லிக் கொள்வோர் பழியைப் பெண்களின் மீது சுமத்திவிட்டுக் கடந்து செல்வதையும் அவதானிக்க முடிகின்றது.
இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை தற்கொலைக்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.
சிலவேளை, உண்மைக் காரணம் என்றுமே வெளிவராமல் கூடப் போகலாம்.
தற்கொலையையே தடுக்க முடியாமல் போய் விட்டது, இதில் காரணத்தை அறிந்துகொண்டு என்ன செய்வது என்று கூடச் சிலர் சிந்திக்கக் கூடும்.
கொலையோ, தற்கொலையோ இரண்டுமே விரும்பத்தகாத சம்பவங்கள்.
அவை தடுக்கப்பட வேண்டியவை. காரணங்களை அறிந்து கொள்வதன் மூலமேயே அவற்றைத் தடுக்க முடியும். குறைந்தது தடுப்பதற்கான முயற்சியையேனும் எடுக்க முடியும்.
பொதுவாக கொலைகளைத் தடுப்பதில் சிரமம் உள்ளது. அதிலும் திட்டமிட்ட கொலையைத் தடுப்பது கடினமே.
ஆனால், சற்று விழிப்போடு இருந்தால் தற்கொலைகளைத் தடுத்துவிட முடியும்.
தற்கொலை செய்பவர்களில் அநேகர் தங்கள் வாழ்க்கை மீதான வெறுப்பு காரணமாக அல்லது தமது பிரச்சனைகளுக்குப் பரிகாரம் காண முடியாத கையறு நிலை காரணமாகவே தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். ஒருவர் அத்தகைய நிலைக்குச் செல்வதைத் தடுத்துவிட்டால் அவரைத் தற்கொலையில் இருந்து காப்பாற்றி விடலாம். அதற்கான பொறுப்பும் கடமையும் அவரது குடும்பத்தினரின், நண்பர்களின் கரங்களிலேயே உள்ளது.
உளவியலாளரின் கருத்துகளின் பிரகாரம் தற்கொலை செய்து கொள்வதற்கான உந்துதல் ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது. தமது வாழ்க்கையை அகாலத்தில் முடித்துக் கொள்ளும் அந்த உந்துதலை மனிதன் வெற்றி கொள்ள அவனது அறிவு பயன்படுகின்றது. அது மாத்திரமன்றி பந்தம், பாசம், கடமை, பொறுப்பு போன்ற அம்சங்கள் வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்துகின்றன. அத்தோடு இலட்சியமும் இணைந்து கொண்டால் ஒருவரது வாழ்வுக்கு அர்த்தமும் கிடைத்து விடுகின்றது. அவ்வாறு வாழ்பவர்கள் தற்கொலையைக் கனவிலும் கூட நினைக்க மாட்டார்கள்.
தற்கால வாழ்வியல் சவால்கள் நிறைந்ததாக உள்ளது. சவால்களை எதிர்கொள்ளத் தைரியம் தேவைப்படுகின்றது.
‘சூழலில் இருந்தே சிந்தனை உருவாகிறது’ என்ற மார்க்சின் கூற்றின் அடிப்படையில் ஒருவருடைய சிந்தனையை அவரது நேரடிக் குடும்பமும், சமுதாயமுமே செப்பனிடுகிறது எனலாம்.
குழந்தையாக இருக்கும் போது பல விடயங்களைக் கற்றுத் தரும் குடும்பம், அந்தக் குழந்தைக்குத் தைரியத்தையும் கற்றுத் தர வேண்டும். மிக முக்கியமாக தோல்வி என்பது வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் என்பதையும் கற்றுத் தர வேண்டும்.
சிக்கலான வேளையில் பக்க பலமாக ஒரு குடும்பமோ, நண்பர் குழாமோ அமையுமாயின் அதைவிடச் சிறந்த வாழ்க்கை எதுவும் இல்லை. ஆனால், இன்றைய குடும்பச் சூழல் அதனை வழங்குவதாக இல்லை. மாறாக, சிக்கல் எழுகின்ற தருணங்களில் தனித்து விடப்பட்ட உணர்வே பலருக்கும் ஏற்படுகின்றது.
குறிப்பாக, புலம்பெயர் சூழலில் குடும்பங்கள் மத்தியிலான விரிசல் பாரியதாக உள்ளது. பொருள்தேடும் நிர்ப்பந்தம் காரணமாக பெற்ற பிள்ளைகளைக் கூடக் கவனிக்க முடியாத நிலையில் பெறறோர் உள்ளனர்.
அன்புக்காக ஏங்கும் பிள்ளைகள் யாரிடம் அதனைப் பெறுவது எனத் தெரியாமல் உள்ளனர். பிள்ளைகள் எதிர்பார்க்கும் விடயங்களைப் பூர்த்தி செய்ய முன்வராத பெற்றோர், தாம் விரும்பும் அனைத்தையும் அல்லது தாம் செய்ய முடியாமல் போன அனைத்தையும் பிள்ளைகளைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்ள நினைக்கின்றனர். இத்தகைய போக்கு உறவுகளின் விரிசலை அகலமாக்குகின்றது.
குடும்ப உறுப்பினர்கள் இடையேயான கருத்தாடல்களை புலம்பெயர் வாழ்வியல் பெரிதும் இல்லாமல் செய்துள்ளது. தப்பித் தவறிக் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களும் கூட சண்டை, சச்சரவிலேயே முடிந்து போகின்றன. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் வாய்ப்பற்ற சூழல் தொடர்ந்து நீடிக்கின்றது. இதன் விளைவாக நண்பர்களிடம் இருந்தே சொந்தப் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களைக் கேட்டறியும் நிலை உருவாகின்றது.
வீட்டுக்கு வெளியே செல்லும் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள், யாரோடு பழகுகிறார்கள் போன்ற விடயங்களை அறியும் வாய்ப்பு பெற்றோருக்கு இல்லை. ஒரு சிலருக்கு அத்தகைய விடயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் கூட இருப்பதில்லை.
மறுபுறம், பிள்ளைகளின் அறிவுத் தேடலோடு ஒத்துப்போகும் வகையில் பெற்றோரின் அறிவு வளர்ச்சி இல்லாமை மற்றொரு குறையாக உள்ளது. தமது பிரச்சனைகளுக்கான ஆலோசனை வழிகாட்டலை வழங்கும் இடத்தில் தமது பெற்றோர்கள் இல்லை என்ற சிந்தனை பிள்ளைகளின் மனதில் தோன்றிவிட்டால் அவர்கள் பெற்றோரை நாட மாட்டார்கள்.
அது ஏற்கனவே உள்ள பிளவை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. நாளடைவில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான சாதாரண உரையாடல் கூட நின்று போகின்றது. நவீன உலகின் அறிவியல் போக்கைப் புரிந்து கொள்ள பெற்றோர்கள் முயற்சி செய்வது அவசியம் என்பது ஒருபுறம் இருக்க, தமது உண்மை நிலையைப் பிள்ளைகளிடம் பேசிப் புரிய வைப்பதும் தேவையாகிறது. இதனூடாக பிள்ளைகளுடனான ஊடாட்டம் தடைப்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
இது விடயத்தில் நண்பர்களின் பங்கும் முக்கியமானது. நட்பு என்பது வெறுமனே கூடிக் களிப்பதற்கு மட்டுமானது அன்று. துயரத்தில் தோள் கொடுப்பதும், பகிர்ந்து கொள்வதும் அதில் அடங்கும். நண்பர்கள் நினைத்தால் தமது சகாக்களின் எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். சரியான நேரத்தில் தலையீடு செய்து விபரீதங்களைத் தடுத்துவிட முடியும்.
குடும்பத்திலோ நட்பு வட்டத்திலோ கிடைக்காத ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க புலம்பெயர் தேசத்திலே ஆலோசனை மையங்கள் நிறைந்து கிடக்கின்றன. பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவற்றை முறையாக அறிவுபூர்வமாக அணுகி எது தேவையோ அதனைச் செய்வதற்கு நிபுணர்கள் காத்திருக்கிறார்கள். உரிய நேரத்தில் அவர்களின் கதவுகளைத் தட்டுவது மாத்திரமே செய்ய வேண்டியது. அதற்கு உறவினர்கள், நண்பர்கள் சிறப்பாக வழிகாட்ட முடியும்.
நோய் வந்துவிட்டால் எவ்வாறு மருத்துவரை நாடுகிறோமோ அவ்வாறே மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை பெற முடியும்.
கொலையோ தற்கொலையோ எதுவாகினும் அவை தனிப்பட்ட நபர்களின் பிரச்சனை என நினைத்துச் செயற்படுவது தவறான அணுகுமுறை. யதார்த்தத்தில் அது சமூகத்தின் பிரச்சனை. ஒவ்வொரு கொலையின் பின்னும் தற்கொலையின் பின்னும் உள்ள காரணத்தை நுணுகி ஆராய்ந்தால் இதன் உண்மை புலப்படும். ஆணவக் கொலையாக இருந்தாலும், கௌரவத்தைக் காப்பதற்காகப் புரியப்படும் தற்கொலையாக இருந்தாலும் அங்கே சமூகம் நேரடியாகச் சம்பந்தப்படுகின்றது. பழக்கவழக்கம், பண்பாடு, கலாசாரம் போன்ற அம்சங்கள் சமூகத்தின் கூறுகளே.
எனவே, கொலைகளை, தற்கொலைகளைத் தடுக்கும் விடயத்தில் விரைந்து செயற்பட வேண்டிய கடப்பாடு சமூகத்துக்கு உள்ளது.
சமூகம் என்பது யாது? நீங்களும் நானும்தானே, வாருங்கள் கரங் கோர்ப்போம்.
வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?
https://www.therapyroute.com/therapists/switzerland/1