உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட சதி நடவடிக்கையா? – எதிரணிகள் ஆணைக்குழுவுக்கு கடிதம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான சதி நடவடிக்கைகளுக்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவும் உடந்தையாகச் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எதிரணித் தலைவர்களால் எழுப்பப்பட்டுள்ளது. தேர்தலுக்கான திகதியைத் தீர்மானிப்பதற்காக திறைசேரிச் செயலாளர் உள்ளிட்ட சில தரப்புக்களுடன் நாளை கலந்துரையாடல் நடத்தப்படவுள்ள நிலையில், அவ்வாறானதொரு கலந்துரையாடல் நடத்தாமல் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் திகதியைத் தீர்மானிக்கலாம் என்று தெரிவித்து எதிரணிகள் கடிதம் அனுப்பியுள்ளன.
“சட்டப்படி தேர்தலை நடத்துவதற்கு இருந்த ஒரேயொரு தடையை உயர் நீதிமன்றம் இப்போது நீக்கியுள்ளதால், எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னதாக இந்தத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது சம்பந்தமாக திறைசேரிச் செயலாளருடனோ வேறு எவருடனுமோ நீங்கள் (தேர்தல்கள் ஆணைக்குழு) கலந்துரையாடத் தேவையில்லை” என்று எதிரணித் தலைவர்களின் கையெழுத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த வர்த்தமானியில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு வெளியிட்டது. அன்றைய திகதியில் நடத்த முடியாது என்று குறிப்பிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு மார்ச் 3 ஆம் திகதி புதிய தேர்தல் திகதியை அறிவிப்பதாகக் குறிப்பிட்டது. அன்றைய தினம் உயர் நீதிமன்றத்தால், தேர்தலுக்கான நிதியை முடக்கி வைக்கவேண்டாம் என்று திறைசேரிச் செயலாளருக்கு இடைக்காலக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து திறைசேரிச் செயலாளர், பொலிஸ்மா அதிபர், அரச அச்சகம், பெற்றோலியக்கூட்டுத்தாபனம் என்பனவற்றுடன் கலந்துரையாடி புதிய தேர்தல் திகதியை நாளை 7 ஆம் திகதி அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் ஜூன் அல்லது அதற்குப் பிந்திய தினத்தில் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக எதிரணிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. இதற்கிடையில் எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றினால், தற்போதைய முறைமையில் தேர்தலை நடத்த முடியாது. புதிதாக வேட்புமனுக் கோரியே தேர்தலை நடத்தவேண்டிய நிலைமை ஏற்படும்.
எனவே, தேர்தலை இழுத்தடிப்பதற்கான சதித் திட்டத்துக்காகவே தேர்தல்கள் ஆணைக்குழு, திறைசேரிச் செயலாளர் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் சந்திப்பை நடத்த முயற்சிப்பதாக எதிரணிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.