எம்.பிக்கள் ஒன்றாகத் தயார்; வடக்கு மீனவர்கள் ஒன்றாகுவீர்களா? – சுமந்திரன் கேள்வி
“வடக்கு மீனவர்களுடைய பிரச்சினைக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் எல்லோரும் ஒன்றாக ஆதரவு வழங்கத் தயார். ஆனால் மீனவர்கள் எல்லோரும் ஒன்றாகப் போராடத் தயாரா?”
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
வடக்கு மீனவ பிரதிநிதிகளுக்கும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ். நகரிலுள்ள விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்படி கேள்வியை எழுப்பினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இழுவைமடி தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நாம் கடந்த காலத்தில் போராட்டத்தை நடத்தியிருந்தோம். ஆதரவு வழங்குவதாக அறிவித்த சில மீனவ சங்கங்கள் இறுதியில் காலைவாரின. இவ்வாறு வடக்கு மீனவர்களிடையே ஒற்றுமையின்மை காணப்படுகின்றது. மீனவர்களாக நீங்கள் ஒற்றுமைப்பட்டால் மாத்திரமே உங்கள் பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியும்.
இழுவைமடி படகுகளுக்கு எதிராகவும், வெளிநாட்டு படகுகள் எமது கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு எதிராகவும் சட்டத்தைப் பிரயோகிக்குமாறு ஒரு போராட்டத்தை உங்களால் ஒற்றுமையாக நடத்தமுடியுமா? மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் ஒற்றுமையாக ஆதரவைத் தருவதற்குத் தயார்.
நீங்கள் ஒருமுனையில் போராட்டம் நடத்த அதற்கு எதிராக மறுமுனையில் இன்னொரு பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தக்கூடாது.
ஜனாதிபதியைச் சந்தித்து அறிக்கையை வழங்கிய பின்னர் போராட்டம் நடத்தினால் அதன் பின்னரான சந்திப்புக்கள் பலமானதாக அமையும்.
இழுவைமடிகளுக்கு எதிரான சட்டத்தை கடற்றொழில் அமைச்சரே நடைமுறைப்படுத்தவேண்டும். அவர் இங்கே அதனைச் செய்கின்றாரா? உள்ளூரில் இழுவைமடி கடற்றொழிலுக்கு அனுமதி தேவை என்றால் அதனை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கவேண்டும். முதலில் உள்ளூர் இழுவை மடிகளை நிறுத்தினாலே இந்திய மீனவர்களின் இழுவைமடிகளை கட்டுப்படுத்த முடியும்” – என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இங்கிருக்கூடிய மீனவர் சமாசங்கள் சம்மேளனங்கள் ஒத்துழைப்போடு செயற்படவேண்டும். ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இங்குள்ள இழுவைமடி தொழில் செய்பவர்களால் ‘உரியவர்களுக்கு உரிய கவனிப்பு’ செல்கின்றது. எனவே, அவர்கள் இதனை தடுத்து நிறுத்தமாட்டார்கள். நாம் மக்கள் பிரதிநிதிகளாக உங்களுடன் எப்பொழுதும் இருப்போம். நீங்கள் ஒற்றுமையாக செயற்படுங்கள்” – என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
“தமிழக மீனவர்கள் தொப்புள்கொடி உறவு என்பது வேறு. அதற்காக எமது மீனவர்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ள முடியாது. இந்திய மீனவர்களுக்கு எமது கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்குவது என்ற தீர்மானத்தை அனுமதிக்க முடியாது. இதனை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒப்பமிட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம். ஏற்கனவே பேச்சுக்களில் பங்குகொண்டு தீர்மானங்களை எட்டிய குழுக்களையே மீண்டும் பேச்சுக்கு அனுப்ப நாம் ஏற்பாடு செய்வோம். இழுவைமடி தொடர்பான சட்டத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்போம்” – என்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கருத்துத் தெரிவிக்கையில்,
“இது கடற்றொழிலாளர்களின் பிரச்சினை மட்டுமல்ல. வடக்கில் வாழக்கூடிய அனைவரினதும் பொருளாதார பிரச்சினை. எந்தவொரு நாட்டிலும், வெளிநாட்டு மீனவர்களை அனுமதி கொடுத்து மீன்பிடியில் ஈடுபட அனுமதிக்கமாட்டார்கள். மாறாக தமது நாட்டுக்குள் நுழைவதற்கான தடைகளைதான் மேலும் மேலும் இறுக்கி வருகின்றார்கள். ஆனால், இங்கு அதற்கு எதிர்மாறாகச் செய்வதன் நோக்கம், எம்மையும் தமிழ் நாட்டையும் மோத வைப்பதுதான்” – என்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கருத்துத் தெரிவிக்கையில்,
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருந்து எதுவித நன்மையும் இல்லை. மீனவர் மோதல் நீண்டகால நிகழ்ச்சி நிரல். இன்று தமிழ் நாட்டு மீனவர்கள் தொழில்நுட்பரீதியாக அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளார்கள். எங்களுடைய அரசு எங்களுடைய மீனவர்களுக்கு அந்தளவுக்கு வளர்வதற்கான வளங்களை வழங்கவில்லை” – என்றார்.