இவ்வருட இறுதிக்குள் அரசியல் தீர்வை வழங்க வேண்டும்! – அரசிடம் ராஜித வலியுறுத்து.
காலத்தை இழுத்தடிக்காமல் மூவின மக்களும் ஏற்கும் அரசியல் தீர்வை இவ்வருடத்துக்குள் அரசு வழங்கியே தீர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தினார்.
தேர்தல் என்று கூறி அரசியல் தீர்வுக்கான சர்வகட்சிப் பேச்சைப் புறக்கணிக்கவோ அல்லது அந்தப் பேச்சை ஒத்திவைக்கவோ முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டங்களில் நானும் பங்கேற்றேன். அரசியல் தீர்வு வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சியினரும் ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனர். இது வரவேற்கத்தக்கது. ஆனால், அதிகாரப் பகிர்வு தொடர்பில்தான் ஒவ்வொரு கட்சியினரும் வெவ்வேறு நிலைப்பாடுகளில் உள்ளனர்.
ஜனாதிபதி கூறியது போல் அதிகாரப் பகிர்வு தொடர்பில் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முரண்பாடுகள் இல்லாத – ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்” – என்றார்.