வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்…ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!
நாடு முழுவதும் சமீப நாள்களாகவே காய்ச்சல், சளி, இருமல் பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. பருவகால காய்ச்சல் என கூறப்பட்டாலும், இம்முறை ஒரு முறை காய்ச்சல் வந்தால் ஒரு வாரத்திற்கு மேலாக இருமல், சளி, உடல் வலி நீடிப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு கவனம் எடுத்து இந்த காய்சல் பரவலை தடுத்து சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் முனைப்பு காட்டு வருகின்றன. மார்ச் 10ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறையின் அங்கமான இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்(ICMR) நாடு முழுவதும் பரவும் சளி காய்ச்சல் குறித்து ஆய்வு செய்து முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 32 மையங்களில் சளி மாதிரிகளை பரிசோதித்து அதன் முடிவுகளை கொண்டு இந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் இன்ஃப்ளுயன்சா H3N2 ( Influenza A subtype H3N2 ) என்ற வைரஸ் அதிக அளவில் பரவி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த தொற்று பாதிப்பானது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயதுக்கு குறைவானர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்படுகிறது. இந்த பருவ கால காய்ச்சல் 5 முதல் 7 நாள்கள் இருக்கும். காய்ச்சல் சென்றாலும் இருமல் தொல்லை 3 வாரம் வரை தொடரலாம் என்றுள்ளது. பாதிப்புக்கு ஆளாகும் நபர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், உடல் வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல், சுவாச பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன.
SARI எனப்படும் தீவிர சுவாசத் தொற்று பிரச்னை கொண்டவர்களில் 50 சதவீதம் பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். அறிகுறி உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
இருமல், தும்மல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூடிக் கொள்ள வேண்டும், கைகளால் கண் மற்றும் மூக்கை தொடக் கூடாது. உடல் வலி மற்றும் காய்ச்சலுக்கு பாரசிட்டமால் மாத்திரை போட்டுக்கொள்ளாலாம். மருத்துவர்கள் ஆலோசனை இன்றி ஆன்டிபயோட்டிக் போன்ற மற்ற மருத்துகளை சுயமாக முடிவெடுத்து உட்கொள்ள கூடாது. மேலும், காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியுள்ளது.