கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதில் பெண்கள் முன்னிலை
வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெறும் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் ஆண்களைவிட பெண்கள் சிறப்பாக செயல்படுவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் பெண்களுக்கு கொடுக்கப்படும் கடன் முறையாக திரும்பிவர அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கடன் தகவல் நிறுவனம் (சிஐசி) தெரிவித்துள்ளது.
இது தொடர்பான புள்ளி விவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
“கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும் கடன் தர மதிப்பீட்டில் பெண்களில் 57 சதவீதம் பேரின் மதிப்பீடு சிறப்பாக உள்ளது. அதே நேரத்தில் ஆண்களில் 51 சதவீதம் பேரின் மதிப்பீடு மட்டுமே சிறப்பாக உள்ளது.
தொழில் தொடங்குவதற்காக பெண்கள் கடன் கோருவது இப்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெண்கள் தொழில் கடன் கேட்டு விண்ணப்பிப்பது 32 சதவீதம் உயர்ந்துள்ளது.
மொத்த தொழில் கடனில் பெண்களின் பங்கு 28 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2022-இல் விவசாயக் கடன், தனிநபர் கடன், வீட்டு உபயோகப் பொருள்களுக்கான கடன் ஆகியவையும் பெண்கள் அதிகம் வாங்கும் கடனாக உள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ள இக்காலகட்டத்தில் அவர்கள் நிதிரீதியாகவும் சுதந்திரமாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
எனவே, அவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஆண்களைச் சாராமல் சுயமாக கடன் வாங்கும் தகுதியையும் அதிகம் பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு நிலவரப்படி நாட்டில் வருமானம் ஈட்டும் வயதில் உள்ள 45.4 கோடி பெண்களில், 6.3 கோடி பேர் கடன் தொடர்பான கணக்குகளை வைத்துள்ளனர்.
பெண்கள் கடனுக்கு விண்ணப்பிப்பதும், அவர்களுக்கு கடன் வழங்கப்படுவதும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
தமிழகம் முதலிடம்: பெண்கள் அதிகம் கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் 91.7 லட்சம் பெண்கள் கடன் கணக்கு வைத்துள்ளனர். விகிதாசார அடிப்படையில் மேற்கு வங்கத்தில் பெண்கள் கடன் வாங்கும் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.