இலங்கை கோரிய கடனை IMF , மார்ச் 20ஆம் திகதி அங்கீகரிக்கலாம்
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ள 2.9 பிலியன் டொலர் எதிர்வரும் மார்ச் 20 அன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கருத்தில் கொள்ளப்படும் என ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒப்புக் கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை பணிப்பாளர் சபை அங்கீகரித்தவுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிதி நிறுவனங்களும் இலங்கைக்கு தேவையான கடன் வசதிகளை செய்ய முன்வரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கடன் வசதியைப் பெறுவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த கடன் மறுசீரமைப்புக்கான ஒப்பந்தத்தை சீனா உத்தியோகபூர்வமாக வெளிப்படுத்தியதை அடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் இன்று இதனைத் தெரிவித்தார்.
சீன அரசாங்கம் தனது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வங்கியின் ஊடாக நேற்று உத்தியோகபூர்வமாக இந்த ஒப்பந்தத்தை வெளிப்படுத்தியதாகவும், ஜனாதிபதி மற்றும் மத்திய வங்கி ஆளுநரால் கையெழுத்திடப்பட்டு நேற்று இரவே சர்வதேச நாணய நிதியத்துக்கு அது அனுப்பிவைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த வாரத்தின் பிற்பகுதியில் கிடைக்க வேண்டிய கடனின் முதல் பகுதியான 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள், மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்பிரல் மாத தொடக்கத்தில் கிடைக்கலாம் என நாணய நிதியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.