“அச்சம் வேண்டாம்” வடமாநிலத்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை!

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் கையுறை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியதாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டு மக்கள் தங்களுடன் சகோதரத்துவத்துடன் பழகுவதாகவும், இங்கு எந்தவித அச்ச உணர்வும் இல்லாமல் தங்கள் சொந்த ஊரில் இருப்பது போலவே பாதுகாப்பாக வாழ்வதாக முதலமைச்சரிடம் புலம்பெயர் தொழிலாளர்கள் கூறியுள்ளனர்.

பிகார், ஜார்க்கண்ட் மாநிலங்களின் அரசுப் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் ஆய்வு செய்தபோது, அந்த குழுவினரிடம் அந்த மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும், நல்ல முறையில் பணி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என புலம்பெயர் தொழிலாளர்களிடம் நம்பிக்கையை வளர்க்கும் வகையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எடுத்துரைக்க வேலையளிப்போர் அமைப்புகளுக்கு, தொழிலாளர்கள் துறை அலுவலர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டும், நேரடி விளக்கக்கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநில குழுவினர் திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, கலந்துரையாடி உண்மை நிலவரத்தை அறிந்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.புலம்பெயர் தொழிலாளர்களின் அச்ச உணர்வினை போக்கும் வகையில், ஈரோடு தொழிலாளர் இணை ஆணையர் தலைமையில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற தொழில் நிறுவன பிரதிநிதிகள், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நிறுவனத்தில் அச்சமின்றி பணிபுரிந்து வருவதாகக் கூறியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள் இணைந்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உறுதி அளித்து வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.