ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தினால் போர் வெடிக்கும்- அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை.
அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான மோதல் சமீப நாட்களாக வலுத்து வருகிறது. வடகொரியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை அமெரிக்கா கடந்த மாத இறுதியில் அறிவித்ததில் இருந்து, மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்த வாரம் தொடங்கும் இந்த போர் பயிற்சிக்கு முன்னோட்டமாக அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் நேற்று முன்தினம் கொரிய தீபகற்பத்தில் போர் விமானங்களை பறக்கவிட்டு பயிற்சியில் ஈடுபட்டன.
இதனிடையே கூட்டுப்போர் பயிற்சியின்போது வடகொரியா பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தினால் அவற்றை அமெரிக்க ராணுவம் இடைமறித்து சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளதாக தென்கொரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்படி ஒரு வேளை தங்களது ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டால் போர் வெடிக்கும் என அமெரிக்காவை வட கொரியா எச்சரித்துள்ளது. இது குறித்து வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடகொரியா தனது ஆயுத சோதனைகளுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க ராணுவ நடவடிக்கையையும் போருக்கான அறிவிப்பாக பார்க்கும்.
பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு சொந்தமானது அல்ல. இருநாடுகளும் தங்களது கூட்டுப்பயிற்சியை விரிவுப்படுத்த நினைத்தால் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக விரைவான மற்றும் வலுவான நடவடிக்கை எடுக்க வடகொரியா தயாராக உள்ளது” என கூறப்பட்டுள்ளது.