நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் இனியும் அழிவு ஏற்படவே கூடாது!
“நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு வலியுறுத்தினார் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகப்பெரும.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் இந்த நாட்டுக்கு ஏற்பட்ட அழிவு இனியும் ஏற்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன்.
நிறைவேற்று அதிகாரத்தை வைத்துக்கொண்டு இப்போது ரணில் விக்கிரமசிங்க செய்வதைப் பாருங்கள். தேர்தல்கள் ஆணையாளர் தேர்தலை அறிவிக்கின்றார். ரணில் இல்லை என்கின்றார். அந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே ரணில் இவ்வாறு செய்கின்றார்.
இந்த நிறைவேற்று அதிகாரம் இந்த நாட்டுக்குச் செய்த அநியாயம் அதிகம். நான் ஜனாதிபதியாகி இருந்தால் இறுதி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி நானாகத்தான் இருந்திருப்பேன்.
1994 இல் இருந்து போட்டியிட்ட எல்லா ஜனாதிபதி வேட்பாளர்களும் முதலில் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்பதுதான். ஆனால், எந்த ஜனாதிபதியும் அதைச் செய்ததில்லை.
நாட்டுக்குப் பொருத்தமான அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசமைப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும்.
ரணில், மஹிந்த, மைத்திரி, சந்திரிகா இப்படி எல்லோருக்கும் சொல்கின்றேன். மீண்டும் ஜனாதிபதியாவதற்கு முயற்சிக்க வேண்டாம். அடுத்த தலைமுறையிடம் நாட்டை ஒப்படைப்போம். இப்போது நாட்டுக்குத் தேவை புதிய முறைமையாகும்.” – என்றார்.