இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் அபாயம்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு அச்சம்.
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் போக்கை கொண்ட நீண்டகால வரலாற்றை பாகிஸ்தான் கொண்டுள்ளது.
ஆனால் பாகிஸ்தானின் தூண்டுதல்களுக்கு, பிரதமர் மோடி தலைமையின் கீழான இந்தியா, கடந்த காலத்தில் இருந்தது போல் இல்லாமல் ராணுவ படை உதவியுடன் பதிலடி கொடுக்கும் சாத்தியம் அதிகமுள்ளது என தெரிவித்து உள்ளது. காஷ்மீரில் வன்முறை பரவி அமைதியற்ற சூழல் அல்லது இந்தியாவின் மீது நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றுடன் கூடிய, இரு தரப்பிலும் அதிகரித்து வரும் பதற்றங்களால் நாடுகள் இடையே போர் ஏற்படும் ஆபத்து காணப்படுகிறது என அறிக்கை தெரிவிக்கின்றது. இதேபோன்று அறிக்கையில், கிழக்கு லடாக் எல்லை பகுதியில் படைகளை குவித்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு, இந்திய வீரர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்திய சீனாவை பற்றியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதில், 2020-ம் ஆண்டு முதல் சீனாவுடனான எல்லை விவகாரம் அதிகரித்து காணப்படுகிறது. இரு நாடுகளும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் வழியே எல்லை விவகாரத்தில் தீர்வு கண்டுள்ளது. எனினும், எல்லை பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்ட சூழலும் காணப்படுகிறது. இது கடந்த பல தசாப்தங்களில் இல்லாத வகையில் தீவிர கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது என்றும் தெரிவித்து உள்ளது.
அணுசக்தி நாடுகளான இந்தியாவும், சீனாவும் சர்ச்சைக்குரிய எல்லை விவகாரத்தில் படைகளை குவித்து வருவதனால், ஆயுத மோதலை ஏற்படுத்தும் ஆபத்து அதிகரித்து உள்ளது. இதனால், அமெரிக்கா மற்றும் அதன் நலன்களுக்கு நேரடி அச்சுறுத்தல் ஏற்பட கூடிய சாத்தியமும் உள்ளது. அமெரிக்காவை தலையிட அழைக்க கூடிய நிலையும் காணப்படுகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. இந்த அறிக்கையில், சீனா, ரஷியா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு வருங்காலங்களில் தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.