மக்களின் வாக்குரிமையைப் பறித்தெடுக்கும் ரணில்! – சபையில் சஜித் குற்றச்சாட்டு.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் சர்வ அதிகாரங்களையும் கொண்ட நபராக மாறி மக்களின் வாக்குரிமையைப் பறித்து வருகின்றார்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டினார்.
தேர்தலை ஒத்திவைப்பதற்கும் வாழ்க்கைச் செலவை அதிகரிப்பதற்கும் எதிராக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அடிமட்டத்தில் ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான நிறுவனமாக உள்ளூராட்சி சபைகளை அழைக்கலாம். தற்போது மாகாண சபைகளும் இயங்காத நிலையில் அதுவும் நிறைவேற்று அதிகாரத்தின் கைகளில் தவழும் சந்தர்ப்பத்தில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாதது நாட்டின் அடிப்படை ஜனநாயகக் கட்டமைப்பை அழிப்பதாக நாம் கருதுகின்றோம்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் தடைகள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குப் பெரும் அடியாக அமைகின்றன. இதன் ஊடாக மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் கூடத் தடைப்படுகின்றன.
நிதி இன்மை எனக் காரணம் காட்டி உள்ளூராட்சி சபைத் தேர்தலைச் சீர்குலைக்கும் தற்போதைய அரசு, நிதியில்லை என்று கூறி எதிர்காலத்தில் பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் சீர்குலைக்கலாம்.” – என்றார்.