அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கே 20ஆவது திருத்தம் : ஹர்ஷ டி சில்வா

“ஜனாதிபதி – பிரதமர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசு தனது கொடுங்கோல் ஆட்சிக்கே அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது என்பதற்காக மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசு மீற முடியாது. அதற்கான அதிகாரம் அரசுக்கு இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனநாயகம் என்பது பெரும்பான்மையின் கொடுங்கோன்மையில்லை. அரசுக்குப் பெரும்பான்மை கிடைத்துள்ளதால் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீற முடியாது.
ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக மனுதாக்கல் செய்வதற்கான அடிப்படை உரிமை, அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டமை போன்றன 19ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சிறந்த விடயங்களாகும்.
மக்களின் உரிமைகளை மீறும் விதத்தில் நாட்டின் தலைவர் செயற்பட்டால் அதற்கு எதிராக சட்டமா அதிபர் மனுத்தாக்கல் செய்யக் கூடிய நிலை 19ஆவது திருத்தத்தின் மூலம் காணப்பட்டது.
20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி விரும்பினால் அவரால் 150 அமைச்சர்களையும் நியமிக்க முடியும்” – என்றார்.