மின் விநியோகத்தில் தட்டுப்பாடு வரக்கூடாது – மின் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக நாட்டில் மின்சாரத் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதை கருத்தில் கொண்டு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்சாரத்துறை, நிலக்கரி அமைச்சகம், ரயில்வே அமைச்சகம் ஆகியவற்றைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வரும் மாதங்களில் குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மின்சாரத்தேவை அதிகளவில் இருக்கும் என்பதால் அதனை சமாளிக்கும் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த உத்திகளின் ஒரு பகுதியாக, நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் உற்பத்தி நிலையங்களில், முன்கூட்டியே தேவையான அனைத்துப் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ளுமாறு மின் பயன்பாட்டு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி நிலக்கரியை அடிப்படையாக கொண்ட அனல் மின் நிலையங்கள் மார்ச் 16ஆம் தேதி முதல் முழு உற்பத்தித் திறனுடன் இயங்குமாறு பிரிவு 11இன் கீழ் ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு வைக்கப்படும்.

இந்தக் கூட்டத்தில் ரயில்வே வாரிய உறுப்பினர் நிலக்கரியை பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்ல போதுமான ரயில் பெட்டிகள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டது. உச்சக்கட்ட தேவையை சமாளிக்க எரிவாயு அடிப்படையிலான மின்சாரம் பயன்படுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல், மே போன்ற பற்றாக்குறை காலங்களில் 9,000 மெகாவாட் எரிவாயு திறன் கொண்ட மின் நிலையங்களை இயக்குமாறு என்டிபிசி நிறுவனத்திற்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

அடுத்த மாதத்தில் உற்பத்திக்குப் போதுமான அளவு தண்ணீரை தேக்கி வைக்குமாறு புனல் மின் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதிய நிலக்கரி சார்ந்த மின் நிலையங்கள் மூலமாக கூடுதலாக 2,920 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மார்ச் மாதத்திற்குள் அவை நிறுவப்படும்.

கோடை மாதங்களில் மின் தட்டுப்பாடு இல்லையென்பதை உறுதி செய்யுமாறு மின்சார நிறுவனங்களை மத்திய மின்சாரத்துறை அமைச்சர் இந்தக் கூட்டத்தின் போது அறிவுறுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் மின்சாரத் தேவையை சமாளிக்க தீவிர நடவடிக்கைகளை எடுக்குமாறும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருமாறும் சம்பந்தப்பட்ட அனைவரையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.