ரணிலின் சக்தியை மக்கள் சக்தி வென்றெடுக்கும்! – அநுர சூளுரை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சக்தியை மக்கள் சக்தி வெற்றி கொள்ளும் என்று ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் மீது இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஆட்சியாளர்களுக்கு எதிரான நியாயமான போராட்டங்களில் பங்கேற்ற எமது கட்சியின் சகோதரர் நிமல் உயிரிழந்துள்ளார். கொழும்பு பல்கலைக்கழகப் போராட்டத்தில் பிரியந்த வன்னிநாயக்க என்பவர் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் போராட்டங்களில் பங்கேற்ற போதே உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தப் போராட்டங்களின் போது பயன்படுத்தப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டுகள் தொடர்பில் எமக்கு சந்தேகங்கள் எழுகின்றன.
இரகசியமான முறையில் இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதா என்ற வலுவான சந்தேகம் எமக்குள் காணப்படுகின்றது. கலகம் அடக்கும் பிரிவினர் உலகில் தடைசெய்யப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனரா என்ற சந்தேகமும் காணப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த வெறித்தனமான செயற்பாடுகளால் தேசிய மக்கள் சக்தியைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ரணிலின் சக்தியை மக்கள் சக்தி வெற்றி கொள்ளும்” – என்றார்.