துப்பாக்கியால் சுட்டு யெகோவாவின் சாட்சிகள் 8 பேர் ஜேர்மனியில் மரணம் (வீடியோ- போட்டோ)
ஜேர்மனியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் ஹாம்பர்க்கில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் ஆராதனை மண்டபத்தில் 8 பேரை சுட்டுக் கொன்றார் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தனர்.
வயிற்றில் சுமந்திருந்த மகளை இழந்த ஏழு மாத கர்ப்பிணிப் பெண் உட்பட எட்டு பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறை மற்றும் வழக்கறிஞர்கள் செய்தி மாநாட்டில் தெரிவித்தனர்.
வியாழன் இரவு துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்னர், குற்றவாளியைப் பற்றி தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், கொலையாளியின் நோக்கம் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கி ஏந்திய நபரை பிலிப் எஃப் என்று மட்டுமே அதிகாரிகள் வெளிப்படுத்தினர். ஜெர்மன் குடிமகனும் முன்னாள் யெகோவாவின் சாட்சியுமான 35 வயதான அவர், உள்ளே நுழைவதற்கு முன்பு, டஜன் கணக்கான மக்கள் கூடியிருந்த மண்டபத்தின் வெளி ஜன்னல் வழியாக சுடத் தொடங்கியதை வெளியே இருந்தோர் கண்டுள்ளனர்.
ஐரோப்பிய நேரம் இரவு 9:00 (2000 GMT) மணிக்கு துப்பாக்கிச் சூடு தொடங்கிய சில நிமிடங்களில் போலீசார் வந்தபோது அவர் முதல் தளத்தில் நின்றவாறு தன்னைத்தானே சுட்டுக் கொண்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, போலீசார் அவரது குடியிருப்புக்குத் சென்றபோது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட 15 குண்டுகள் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பலியானவர்களில் நான்கு ஆண்களும் இரண்டு பெண்களும், கருவில் இருந்த பெண் குழந்தையும் அடங்குவர். (கடைசியாக இறந்தவரது விபரம் தெரியவில்லை). காயமடைந்தவர்களில் உகாண்டா மற்றும் உக்ரைன் பிரஜை ஒருவரும் அடங்குவதாகவும், நான்கு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுமுள்ளனர்.
யெகோவாவின் சாட்சிகள் என்பது 1870 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு சர்வதேச கிறிஸ்தவப் பிரிவாகும். அவர்கள் வீடு வீடாகச் சென்று சுவிசேஷம் செய்வதால் பல நாடுகளில் நன்கு அறியப்பட்டவர்கள்.
யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் நடந்த அந்த நிகழ்ச்சி தொடங்கியபோது சுமார் 50 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டிடம் யெகோவாவின் சாட்சிகளின் குழுவால் பல ஆண்டுகளாக வழிபாட்டு தலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று குடியிருப்பாளர் அன்னெலோர் பீமுல்லர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
மற்றொரு குடியிருப்பாளரின் தொலைபேசி வீடியோ காட்சிகள் கட்டிடத்திற்கு வெளியே நின்று ஒரு நபர் ஜன்னல் வழியாக சுடுவதைக் காட்டியது.
“நான் பலத்த துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டேன்,” என்று தெரிவித்த அந்த நபர் தனது பெயரைக் கூற மறுத்துவிட்டார். “ஒரு நபர் துப்பாக்கியால் ஜன்னலில் சுடுவதை நான் கண்டேன்.” என மட்டுமே தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை, இறந்த மக்கள் நினைவாக மண்டபத்திற்கு வெளியே மலர்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். தடயவியல் ஊழியர்கள் பல உடல்களை, சவப்பெட்டியிகளிலும், மற்றவற்றை பைகளிலும் சுற்றி, கருப்பு வேனில் ஏற்றினர்.
ஹாம்பர்க் மேயர் அதிர்ச்சி தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளைத் தொடரவும், பின்னணியை தெளிவுபடுத்தவும் படைகள் முழு வேகத்தில் செயல்பட்டு வருகின்றன” என்று பீட்டர் ட்சென்ட்ஷர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.