மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும்!
உள்ளூராட்சி சபைத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே தேர்தல் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. என்னைப் பொறுத்தவரையில்,உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும். அதனால்தான் எமது மாவட்டத்தில் 19 உள்ளூராட்சி சபைகளில் எனது தலைமையில் ஐக்கிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல் செய்தது. உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் இன்னும் முடிவடையவில்லை. ஆனால், மாகாண சபைகள் கலைக்கப்பட்ட நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் 4 வருடங்களாக நிலுவையில் இருக்கின்றது. அதனால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை விட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே தேர்தல்கள் ஆணைக்குழு முன்னுரிமை வழங்க வேண்டும்.
மேலும் மிகவும் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது ஓரளவு ஸ்திர நிலைக்கு வர ஆரம்பித்திருக்கின்றது. நாடு சுமுகமான நிலைக்கு வந்துகொண்டிருக்கின்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனால் ஹோட்டல்கள் நிரம்பி வழிய ஆரம்பித்திருக்கின்றது. ஆனால், இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றனர். இந்தச் சூழ்ச்சியில் மக்கள் சிக்கிக்கொள்ளக்கூடாது.
பெருந்தோட்ட மக்கள் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் முகம்கொடுத்து வரும் மக்களாகவே உள்ளனர். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. அவர்களின் தொழில் மதிக்கப்படுவதில்லை. மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே அவர்கள் தோட்டங்களில் தொழில் செய்து வருகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
மேலும் எமது மக்கள் மீது காட்டப்பட்டு வரும் பாரபட்சம் ஒழிக்கப்பட வேண்டும். தேசிய நீராேட்டத்துக்குள் மலையக மக்கள் உள்வாங்கப்பட வேண்டும்” – என்றார்.