ஓயோ நிறுவனரின் தந்தை 20வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!
இந்தியாவின் இளம் தொழிலதிபரும் ஓயோ நிறுவனத்தின் நிறுவனருமான 29 வயதான ரிதேஷ் அகர்வால் இந்தியாவின் இளம் பெரும் கோடீஸ்வரராவார். தங்கும் விடுதிகளை வாடகைக்கு விடும் பிரபல நிறுவனமான ஓயோ- வின் நிறுவனரான இவர், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார். 2013இல் தனது 19ஆவது வயதில் ஓயோ ரூம்ஸ் நிறுவனத்தை தொடங்கிய ரிதேஷ் தனது அபார வணிக யுக்தியால் குறுகிய காலத்தில் வெகு விரைவான வளர்ச்சியை கண்டார்.
இவருக்கும் கீதன்ஷா சூட் என்பவருக்கும் கடந்த 7ஆம் தேதி அன்று டெல்லி தாஜ் பேலஸ் ஹோட்டலில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. தனது திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார் ரிதேஷ். இந்நிலையில், திருமணம் முடிந்த 3ஆவது நாளான நேற்று நண்பகல் 1 மணி அளவில் குருகிராமில் உள்ள DLFs The Crest society அடுக்குமாடி குடியிருப்பின் 20ஆவது மாடியில் இருந்து விழுந்து ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தனது தந்தையின் மறைவு குடும்பத்திற்கு பேரிழப்பு என ரிதேஷ் அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது தற்கொலை மரணமாக இருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. தந்தையை இழந்த ரிதேஷ் அகர்வாலுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரிதேஷ் அகர்வாலுக்கு 3 நாள்களுக்கு முன்னர் தான் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்ற நிலையில் அவரது தந்தை நேற்று உயிரிழந்தது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.