’20’ விவகாரத்தால் சு.கவுக்குள் பிளவு ஏற்படும் சாத்தியம் ?
ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தலைவர்;
கடுமையாக எதிர்க்கின்றார் ஆலோசகர்
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எடுத்த எடுப்பிலேயே ஆதரவு வழங்கக்கூடாது எனவும், அதை மதிப்பிடுவதற்கு இடைக்காலக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது எனவும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும் தற்போதைய ஆலோசகருமான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ அறிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசு தனக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைப் பறிக்க முயலக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தில் சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும் நாட்டுக்குச் சாதகமான விடயங்கள் பல அந்தத் திருத்தத்தில் உள்ளன. எனவே, 20ஆவது திருத்தம் எதற்கு எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டுக்குப் புதிய அரசமைப்பே தற்போது தேவை எனவும் ரோஹன லக்ஸ்மன் பியதாஸ சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கடந்த நல்லாட்சியில் இரு தரப்பு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் முற்போக்கான பல விடயங்கள் நடைமுறைக்கு வந்தன.
19ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டமையால் நாடு பெரும் நன்மைகளைப் பெற்றது. ஆனால், 20ஆவது திருத்தச் சட்டமூலம் முற்போக்கு சக்திகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஆகையினால், இந்தச் திருத்தச் சட்டமூலத்தை மதிப்பிடுவதற்கு இடைக்காலக் குழுவொன்றை எமது கட்சி நியமிக்கவுள்ளது” – என்றார்.